உ

"உன்னதம்."

(நண்பர் எம்.எஸ்.பெருமாள் கமெண்ட் ஒன்றில் சொன்னதை கருவாக கொண்டு,ஒரு பதிவாக இங்கே தருகிறேன்)

ஜெயகாந்தன் அவர்களின் பிரம்மோபதேசம் கதையை நடிகர் எஸ் வி சுப்பையா "குருவே தெய்வம்" என்ற பெயரில் திரைப்படமாக எடுக்கிறார்.இப்படம், இயக்குனர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு சொந்தமான கற்பகம் ஸ்டூடியோவில் படமாக்கப்படுகிறது படம் வெளியான பின்னர் இவ்வகையில் கேஎஸ்ஜி க்கு, எஸ்விஎஸ் சுமார் 50000 ரூபா தரவேண்டி உள்ளது.ஆனால் தர முடியாத பண நெருக்கடி.

கேஎஸ்ஜி ஒரு யோசனை சொல்கிறார்.

"ஒரு படத்துக்கு ரூ 20000 வீதம் ஒரு வருடத்தில் எனக்கு மூன்று படங்கள் நடித்துக்கொடுப்பதாக ஒப்பந்தம் போட்டுக்கொள்வோம்ண்ணே! நீங்க கொடுக்க வேண்டிய துகையும் பைசல் ஆகிவிடும்!"

எஸ்விஎஸ் சொல்கிறார்.

" நான் படத்துக்கு பத்தாயிரந்தானே வாங்குறேன் ..
என்னெ பேராசைக்காரன் ஆக்கிடாதேப்பா ...அஞ்சு படத்துலெ நடிச்சு கழிச்சிடறேன்!அப்படி பத்திரத்தை மாத்திக் கொண்டு வா ...."

இது நடந்து முடிய, முதல் படம் " ஆதி பராசக்தி " தொடங்குகிறது சுப்பையா அபிராமி பட்டராக நடிக்கிறார்.

அரசனுடன் கோவிலில் வாதிடும் காட்சி படமாக்கப்படுகிறது

"இன்று நிலவு வானில் உதிக்குமா?"

என்று அரசன் வெகுண்டு கேட்க,

"உதிக்கும்; போடா!"

என்று பட்டர் அலட்சியமாக பதிலளிக்கிறார்.

சிலிர்த்துப்போன இயக்குனர் பிறகு அந்த பத்திரத்தை சுப்பையாவின் இந்த ஒரே ஒரு ஷாட்டுக்கு பாராட்டாகக் கிழித்து அவர் காலடியில் போட்டுவிட்டு,

" பட்டாலும் பட்டேன்
( அபிராமி ) பட்டரிடம்
நானல்லோ கடன் பட்டேன் ..! "

என்று கண்ணீர் மல்கினாராம்

Comments

Popular posts from this blog

" மஹா பெரியவா சரணம்"