உ

இன்று காலை நடந்த ஒரு நிகழ்வு

அழைப்புமணி ஒலிக்க கதவை திறக்கிறேன்

எங்கள் குடியிருப்பு காவலாளி (வயது 75) கையில் நான் கொடுத்துள்ள சிறு குறிப்பு புத்தகத்துடன் என்னைப்பார்த்து தலையை சொறிகிறார்.

"என்ன விஷயம் அய்யா?ஒண்ணாம் தேதிதானே சம்பளம் வாங்கினீங்க !அதுக்குள்ள அட்வான்சா?"

"இல்ல என் சம்பளத்தில் 1000 ரூபா பிடித்தம் செஞ்சுருக்கீங்க!"

"ஆமாம்! அதுதான் இந்த புக்கில் எழுதியிருக்கேனே ?"

அவர் வாங்கும் அட்வான்ஸ், பிடித்தம், கொடுத்த சம்பளம் ஆகியவற்றை நான் குறித்து கொடுக்கும் புத்தகம் அது.

"நான் போன மாதம் நானூறு ரூபாதான் அட்வான்ஸ் வாங்கினேன் சார்! ஆனா ஆயிரம் ரூபா பிடிச்சிருக்கீங்க!"

"ஆமாய்யா ! அதுக்கு முன்னாடி மாசமெல்லாம் பாருங்க! 1000 1500 என்றெல்லாம் அட்வான்ஸ் வாங்கிருக்கீங்க.ஆனா நான் மாதா மாதம் பிடித்தம் செய்வது 1000 ரூபா தான் அதான் இப்போ இன்னும் 1600 ரூபா பாக்கி உங்க கணக்கில் இருக்கு!"

இது அவருக்கு மேலும் அதிர்ச்சியாக இருப்பதை அவர் முகம் பிரதிபலிக்க,

"பெரியவரே நான்றாக பாருங்கள்!" என்று அந்த நோட்டை காண்பித்து விளக்க ஆரம்பித்தேன்

"எனக்கு படிக்கத் தெரியாது சார்!"

"சரி உங்க பிள்ளையிடம் அல்லது மற்ற போர்ஷனில் இருக்கும் யாரிடமாவது இதை காண்பியுங்கள்! அதை விளக்குவார்கள்."

ஒரு நொடி தாமதமின்றி அவர் ..

:"ஆங்! இந்த புக்கை உங்களைத் தவிர வேறு யாரிடமும் காண்பிக்க மாட்டேன்!"
என்று சொல்லி அதே சந்தேகத்துடனே அங்கிருந்து அகல, நான் கண் கலங்கி நின்றேன்..

இதை இறைவன் எனக்கு அளித்த விடையாக நான் உணர்ந்தேன்.

என்னை அந்த முதியவர் இடத்திலும், இறைவனை என் இடத்திலும் பார்த்தேன்! 

அந்த குறிப்பு புத்தகம் என் பல ஜென்ம பாப புண்ணிய கணக்கு !

"இந்த பிறவியில் நான் 400 ரூபா அளவில்தானே பாபம் செய்துள்ளேன்! பின் ஏன் 1000 ரூபா அளவில் எனக்கு தண்டனை?"

இறைவன் பொறுப்பாக பொறுமையாக எனக்கு விளக்குகிறார்!

"எனக்கு எழுத படிக்க தெரியாது!" என்கிறேன்

"வேறு ஞானிகள் யாரிடமாவது சென்று கேள்!" என்கிறார்.

"உங்கள் மேல் எனக்கு நம்பிக்கை உள்ளது! உங்களைத்தவிர நான் இதற்கு யாரிடமும் விளக்கம் கேட்க மாட்டேன்!" என்று சொல்லிவிட்டு தொடர்ந்து சந்தேகத்துடன் வாழ்கிறேன் !

இறைவனோ செய்வதறியாது திகைக்கிறார்.

எனையாளும் ஈசன் செயல் 🙏🙏🙏🙏

Comments

Popular posts from this blog

" மஹா பெரியவா சரணம்"